செந்தமிழ்சிற்பிகள்

வ. வே. சு. (வ. வே. சுப்பிரமணியம்) (1881 - 1925)  

 வ. வே. சு. (வ. வே. சுப்பிரமணியம்) (1881 - 1925)

அறிமுகம்

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணியம் என்ற வ.வே.சு. அவர்கள் ஏப்ரல் 2, 1881-ல் பிறந்தார். திருச்சி வரகனேரியைச் சேர்ந்தவர்.  இவர் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) மாநிலத்தில் ஐந்தாவதாகத் தேறினார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார். பின்னர் சென்னை சென்று வக்கீல் பரீட்சையில் முதல் பிரிவில் தேறி, சென்னை மாநகர் ஜில்லா கோர்ட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார்.  கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கினார். வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். 1907-இல் வ.வே.சு. ரங்கூன் வழி லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.

தமிழ் மற்றும் இலக்கியப் பணி  

  • இவர் தேசபக்தன் இதழுக்கு 1920 முதல் 1922 வரை ஆசிரியராக இருந்தார்.
  • 1924 முதல் பாரத்வாஜ ஆசிரமத்தில் இருந்து பாலபாரதி என்னும் இதழை நடத்தினார். 
  • தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ச்சியாக எழுதினார். நவீன இலக்கியத்தின் எல்லா களங்களிலும் தொடக்ககால எழுத்துக்களை உருவாக்கினார். இலக்கிய ஆய்வு, புனைவிலக்கியம், இலக்கியவிமர்சனம், இலக்கிய அறிமுகம், வரலாற்று அறிமுகம் ஆகிய ஐந்து தளங்களில் எழுதியிருக்கிறார்.
  • திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • 1921-1922 காலப்பகுதியில் பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், கம்பராமாயண ஆராய்ச்சி (KAMBARAMAYANA: A STUDY) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். 
  • கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்து, ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்தார். 
  • கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.
  • கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.
  • லண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் லண்டன் கடிதம் என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார்.
  • பாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவு செய்தார்.

படைப்புகள்

  • மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
  • இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
  • குளத்தங்கரை அரசமரம் என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார்.

நினைவு இல்லம்

திருச்சியில் இவர் வாழ்ந்த இல்லத்தை வ.வே.சு. நினைவகம் எனும் பெயரில் தமிழ்நாடு அரசு நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வ.வே.சு. வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.